சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

 „இருவடை எடுத்து ஒருவடை என்பார்

திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!“

 மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

 ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..

 ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’

 இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.

 டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

 நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.

 ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்…

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’

 எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert