அப்பா – பிள்ளைகள் படிக்கவேண்டிய சிறு கதை

அம்மா, கொஞ்சம் தாகத்துக்கு ஜலம் குடிச்சுக்கோ, வெய்யில் வேற இன்னிக்கு அதிகமா இருக்கு என்று தனது 75 வயது அம்மாவை அக்கறையோடு கேட்டான் ரகுராமன்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு போயிடலாம் என்றாள் அம்மா.

பேங்க் மேனேஜரைப் பார்த்து வாரிசு சர்டிபிகேட், பாஸ்புக் கூடவே ஒரு கவரிங் லெட்டர் எல்லாம் கொடுத்து விட்டு, „எங்க அம்மா சகுந்தலா பெயரில் எல்லாம் மாத்திடுங்க சார்,“ என்றான் ரகுராமன்.
பிறகு கொஞ்சநேரம் காத்திருந்தான்.
அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான். அப்பா இறந்து போய் இந்த 45 நாட்களில் அம்மா ரொம்பவும் ஆடித்தான் போயிட்டா.

„அம்மா கவலைப் படாதேம்மா“ என்று ரகுராமனும் அவன் மனைவியும் அடிக்கடி சொல்லி அவளை ஒருவாறு தேர்த்தி இப்போதுதான் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆகஸ்ட் மாசக் கடைசியில் மகன் வாசுவுக்கு உபநயனம் செஞ்சுடலாம்னு அப்பாவிடம் ஏப்ரல் மாதமே நாள் பார்க்கச் சொல்லி இருந்தான் ரகுராமன்.
விஷயத்தைக் கேட்டவுடன், பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம்போய் நல்ல நாள் பார்த்துக் குறிச்சுக் கொண்டு வந்தார் அப்பா.

அப்போது தெரியாது ரகுராமனுக்கு அடுத்த மாசமே அப்பா போயிடுவார்னு.
„ரகு, நீ பணம் எதுவும் கொண்டுவர வேண்டாம், என் பேரன் வாசுவை மட்டும் இங்கக் கூட்டிண்டு வா, எல்லா செலவையும் நான்தான் செய்வேன்“ என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.

பென்ஷன் பணம், நிலத்தில் கிடைக்கும் கொஞ்ச மகசூல் பணம் இதெல்லாம் சேர்த்து வெச்சிருப்பாரோ. ஒரு வீடு ஊர்ல இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகைப் பணம் நேராக பேங்குக்கு வர்றமாதிரி பேசி வெச்சிருந்தார் அப்பா.

„லாக்கர்ல அதிகம் பொருட்கள் இல்ல, எதுக்கு வேஸ்ட்டா அதுக்கு வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்கணும்“ னு அம்மா சொன்ன போது, „இருக்கட்டும் நம்ம பையன் சீக்கிரம் நகைகள் வாங்கிண்டு வந்து அடுக்குவான், இருக்கட்டும்“ னு சொன்னார்.

„ரொம்ப தைரியமான மனிதர் என் அப்பா“ என்று ரகுராமன் மனதுக்குள் தன் அப்பாவைப் பற்றி சிலாகித்துக் கொண்டான்.

பி காம் படிச்சு முடிச்சு ஆறு மாதத்துக்குப் பிறகு TVS கம்பெனி, சோளிங்கர் பிராஞ்சுல வேலை கிடைச்சு லெட்டர் வந்தவுடன், மாயவரம் ரயில்வே ஜங்க்ஷனுக்குப் போய் செங்கல்பட்டுக்கு டிக்கெட் போட்டு வந்தார் அப்பா.

„நேரா செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போ அங்கேர்ந்து சோளிங்கர்க்கு பஸ்ல போயிடலாம். மெட்ராஸ் பொய் சோளிங்கர் போனா 3 மணிநேரம் டைம் வேஸ்ட்“ என்றார். பிறகு, „செங்கல்பட்டு ஸ்டேஷன்ல இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல நரசிம்ம விலாஸ் னு ஒரு ஹோட்டல் இருக்கு, பேர பார்த்துட்டு அது சைவ ஹோட்டல் னு நெனைச்சு போயிடாதே பேர அப்படி வெச்சு ஏமாத்தறான். அது அசைவ ஹோட்டல், நன்னா விசாரிச்சுட்டு நல்ல ஹோட்டலாப் பார்த்து சாப்பிடு“ என்றார்.

முதல் மாசம் சம்பளம் வாங்கினவுடன் ரகுராமன் பெயரிலேயே ஒரு பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதாமாதம் சம்பள பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர்.

இன்று ரகுராமனுக்குத் திருமணமாகி 15 வருடம் முடிந்த நிலையில், பிள்ளைகள் படிப்பு, நகர வாழ்க்கையில் வாடகை, இதர செலவுகள் என்று நிறைய செலவுகள்.

எந்த மாதமும் அப்பா ரகுவிடம் செலவுக்கு பணம் எடுத்துக்கொடு எனக் கேட்டதேயில்லை. மாறாக தீபாவளி, சங்கராந்தி, கார்த்திகை தீபம், ஆடிப் பெருக்கு என்று எல்லாருக்கும் டிரஸ் வாங்கி அனுப்புவதும் „டவுன்ல இதெல்லாம் உனக்கு செய்ய நேரமே இருக்காது“ என்று அம்மா பக்ஷணங்கள் செயது அனுப்புவதும் வருஷா வருஷம் நடந்த நிகழ்வுகள்.

அப்பாவும் அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அனுப்பி வைப்பான் ரகு. ஒவ்வொரு முறையும் பேரனுக்குச் செயின், மோதிரம், சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார் ரகுராமனின் அப்பா.

அவருக்கு செலவுக்கு இருக்கான்னு எப்போதாவது கேட்கும்போது „நிறைய இருக்கு, கவலைப் படாதே பகவான் குடுக்கறதை பத்திரமா வெச்சு செலவு பண்ணனும்“னு சொல்வார்.

„சார், மேனேஜர் கூப்பிடறார்“ என்று வங்கி ஊழியர் கூப்பிட நினைவுக்கு வந்தான் ரகுராமன். அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே போனான்.
„உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல ஒரு லட்சத்து எழுபதாயிரம் இருக்கு, அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா“, என்றார். ரகு, „சரி“ என்றான்.
அம்மாவோ உடனே, „அது வாசுவின் உபநயனத்துக்கு நீ எடுத்துக்கோ அதுக்குத் தான் உங்க அப்பா வெச்சிருந்தார்“ என்றாள். இந்த நிலைமையில் உபநயனம் எப்படிம்மா என்றதற்கு „அது எப்போ செய்தாலும் இந்தப் பணத்துலதான் செய்யணும், அதுதான் அப்பாவோட ஆசை“ என்றாள் ரகுராமனின் அம்மா.

ரகு, „அம்மா சரி போவோம்“னு கிளம்ப வங்கி மேனேஜர், „லாக்கர்ல எதுவும் பார்க்கலியா“ என்றார்.
„அதை மறந்தே போய்ட்டோம், சரி அதுல வெள்ளி டம்ளர் வெள்ளி சொம்பு தான் இருக்கும்“னு ரகுராமன் சொன்னான்.
எதற்கும் பார்க்கப் போனார்கள்.
அப்பா வைத்திருந்த லாக்கர் சாவியைப் போட்டுத் திறந்து பார்த்தபோது உள்ளே 2 பேப்பர்க் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவை அந்த பேங்க்கின் ஷேர் பத்திரங்கள். 500 ஷேர்கள். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு. எல்லாவற்றையும் அம்மா பெயருக்கு வாங்கி வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 5 லட்சம் ருபாய் மதிப்புக்கு.
மேலே ஒரு கடிதம். அதில் „என் காலத்துக்குப் பிறகு என் மனைவி சகுந்தலாவுக்கு இந்த ஷேர்கள் உபயோகமாகட்டும்“னு என்று சுருக்கமாக எழுதி இருந்தார் அப்பா.
அதற்கும் கீழே ஒரு சுருக்குப் பையில் என்னவோ இருந்தது, என்ன என்று பார்த்தால் ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!
அவற்றைப் பார்த்த பிறகு ரகுவுக்குத் துக்கம் அடக்கமுடியவில்லை.
பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு பிளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான் ரகு.

சற்றுத் தள்ளி நின்றிருந்த வங்கி மேனேஜர், „ரகுராமன் சார், தண்ணீர் குடிங்க“ என்று ஆசுவாசப்படுத்தினார்.
அம்மாவைப் பார்த்தான் ரகு. அவள் கண்களிலும் சில துளி கண்ணீர் இருந்தது. ரகுராமனுக்கு அம்மா ஆறுதல் சொன்னாள்.

வீட்டுக்கு வரும் வழியில் ஆட்டோவில் வரும்போது அம்மாவிடம் கேட்டான் ரகுராமன்.

„எனக்குன்னு ஒரு செலவு கூட வெக்கலியே அப்பா… உனக்குக் கூட பேங்க் ஷேர் அஞ்சு லட்சத்துக்கு வாங்கி வெச்சுட்டுப் போய்ட்டார்.
அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்துண்டிடுருக்கு, எனக்கு செலவு எதுவும் வைக்கலியே“ என்றான் அம்மாவின் கரத்தை பிடித்துக் கொண்டு

„அதாண்டா அப்பா“ என்றாள் ரகுவின் அம்மா.

அப்பா இறந்தபிறகே உலகம் அவரைப் புரிந்துகொள்கிறது.

தாய் பத்துமாதம் சுமந்தாள் என்றால்,
தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் மனதிலும் தோளிலும் சுமக்கிறான்.

(thanks to the original uploader)

Über suresh

Ich bin Inder und deutscher Staatsbürger. Als patriotischer Weltbürger pendele ich zwischen beiden Heimaten und fühle mich sehr wohl dabei. Inzwischen habe ich in beiden Welten mein Zuhause gefunden. Mit Wahrem und Erlebtem aus meinem Leben schreibe ich Geschichten in meiner Muttersprache Tamil, English und gelegentlich auch in Deutsch Mein Ziel ist aber, mit unterhaltsamen Erzählungen zur interkulturellen Völkerverständigung beizutragen, auch um Missverständnisse möglichst auszuräumen. Ich denke "Ethik ist eingebaut - Religion ist eingebracht" 'Connecting Cultures' ist meine Aufgabe. 'Helfe um geholfen zu werden' ist mein Motto.
Dieser Beitrag wurde unter Geschichten, in tamilischer Sprache veröffentlicht. Setze ein Lesezeichen auf den Permalink.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.

Diese Website verwendet Akismet, um Spam zu reduzieren. Erfahre mehr darüber, wie deine Kommentardaten verarbeitet werden.